மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்?

மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது.

Bajit-Maginta-Tna

மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளது போலவும், செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கோ, அவருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ சம்பந்தன் விரும்புவார் என்று தோன்றவில்லை.

ஏனென்றால், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி 2015ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டமை தமிழ் மக்களின் அவசியத் தேவை யாக அவர் அண்மைய நாட்கள் வரை வலியுறுத்தி வந்திருக்கிறார். மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் அமர்வதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறி வந்திருக்கிறார்.

இப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்கும் கனவு சம்பந்தனுக்கு வந்திருக்கும் என்று ஒருபோதும் கருத முடியாது.

மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எப்போதோ கிடைத்திருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அதனை அவர்கள் செய்திருக்கலாம்.

ஆனால், அப்போது அதனை செய்யாத சம்பந்தன், தற்போதைய சூழலில் அவ்வாறானதொரு முடிவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தான், அவரது தோல்விக்குக் காரணம் என்று இரா.சம்பந்தன் இன்னும் நம்பிக் கொண்டிருந்தால் அது அவரது பலவீனம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அந்த முடிவை எடுப்பதற்கு முன்னரே, தமிழ் மக்கள் அந்த முடிவை எடுத்து விட்டனர். மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க அவர்கள் தீர்மானித்து விட்டனர்.

அதனை ஓரளவுக்கு உணர்ந்து கொண்ட பின்னர் தான், கூட்டமைப்பும் பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சாய்ந்தது.

எனவே, மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுத்துச் செயற்பட்ட தமிழ் மக்கள், மீண்டும் அவர் பதவிக்கு வருவதை விரும்புவார்களா என்பது முக்கியமான கேள்வி.

சிங்கள மக்களின் தலைவனாகவே இருக்க விரும்பும் மஹிந்த ராஜபக்சவுக்கு, இனிமேலும் வாக்களிக்க சிங்கள மக்கள் விரும்புவார்கள். ஏனென்றால் அங்கு மாறி மாறி இரு கட்சிகளும் அதிகாரத்துக்கு வருவது இயல்பு.

ஆனால், மஹிந்த ராஜபக்சவை விரட்டுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த தமிழ் மக்கள், சிங்கள மக்களைப் போலவே, மைத்திரியோ, ரணிலோ இல்லாவிட்டால் மஹிந்த என்ற முடிவை எடுப்பார் கள் என்று எதிர்பார்க்க முடியாது.

2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனாலும், தமிழ் மக்கள் அவரை ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை.

ஆக, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் எத்தகைய முடிவையும் எடுத்து விடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைக்கக் கூடாது.

இரா.சம்பந்தனுக்கு இந்த அடிப்படைப் பாடம் கூடப் புரிந்திருக்காது என்று எதிர்பார்க்க முடியாது.அதைவிட, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன், சம்பந்தன் 18 சுற்றுப் பேச்சுக்களை நடத்தி வெறும் கையுடன் திரும்பி யவர்.

இனிமேலும், அவருடன் கூட்டுச் சேர்ந்து எதையும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை கொள்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

அவ்வாறாயின், எதற்காக மஹிந்த ராஜ பக்சவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் கூறினார் என்ற கேள்வி இருக்கிறது.

இதற்குப் பலரும் பல்வேறு காரணிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

1. அரசாங்கத்தை எச்சரிப்பது.

2. அரசாங்கத்துக்கு துணையாக இருக்கும் பிராந்திய, சர்வதேச சக்திகளுக்கு எச்சரிக்கை விடுப்பது.

3. அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பது.இப்படிப் பலரும் பல்வேறு காரணங்களையும் அடுக்குகின்றனர்.

மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட சம்பந்தன் விருப்பம் வெளியிட்டிருப்பது, அதுவும் தற்போதைய தருணத்தில் அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியமானதொரு விடயம் தான்.

அதாவது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் பலன்களை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமல், அரசாங்கம் ஏமாற்றி விட்டதான வெறுப்புணர்வில் இருக்கின்ற சூழல் இது,

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின். மீதும் தமிழ் மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசியலமைப்பு மாற்றத்துக்கான பணிகள், கிட்டத்தட்ட முடங்கிப் போயிருக்கின்றன.

இந்த முடக்கத்துக்கு ஐ.தே.க. வினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் செயல்களே காரணம் என்று இரா.சம்பந்தன் பகிரங்கமாகவே குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறார்.

சில வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இதனைக் கூறி, அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதைவிட, வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாகவும், பேச்சு நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி மூன்று வாரங்களாகியும், சந்திப்புக்குச் சாதகமான சமிக்ஞைகள் இன்னமும் கிடைக்கவில்லை.

ஆக, மொத்தத்தில், கூட்டமைப்பை அரசாங்கம் ஏமாற்ற முனைகிறதா என்ற சந்தேகம், சம்பந்தனுக்கும் ஏற்பட்டுள்ள சூழலில் தான், மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதன் மூலம், அவர் அரசாங்கத்துக்கு ஒரு மறைமுக செய்தியை அல்லது எச்சரிக்கையை கொடுக்க முனைந்திருக்கலாம்.ஏனென்றால். இப்போது அரசாங்கத்துக்கு எதிரான பலம்வாய்ந்த சக்தியாக இருப்பது மஹிந்த ராஜபக்ச தான்.

மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவது போன்ற தோற்றப்பாட்டைக் காண்பித்து, பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்ல முனையும்,

மைத்திரி- ரணில் அரசாங்கத்தை தமது பக்கம் திருப்ப சம்பந்தன் முனைகிறாரா என்ற சந்தேகத்தில் நியாயப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இழுத்தடிக்கும் அரசாங்கத்துக்கு கடிவாளம் போடுவதற்கு இதுபோன்ற இராஜதந்திர உத்திகளும் அவசியமானவை என்று அவர் கருதக் கூடும்.

ஆட்சியில் இருக்கின்ற இப்போதைய அரசாங்கமோ முன்னைய அரசாங்கமோ தமிழர்களின் பிரச்சினைகளை இதய சுத்தியோடு அணுகியதும் இல்லை.

அதனைத் தீர்ப்பதற்கு உண்மையான முயற்சிகளை மேற்கொண்டதுமில்லை.எனவே, பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய தரப்பின் பக்கம் சார்வது இயல்பானதே என்ற எச்சரிக்கை வேட்டு ஒன்றை தீர்க்க சம்பந்தன் முயன்றிருக்கலாம்.

ஆனால், மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும், அதன் மூலம் தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை அண்மையில் கூட சம்பந்தன் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார் என்பதை மறந்துவிட முடியாது.

அதைவிட, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையும் கரையத் தொடங்கியுள்ள சூழலில், இரண்டு தரப்புகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பில், தான் இருப்பதாக சம்பந்தன் உணர்கிறாரோ தெரியவில்லை.

அடுத்து, இந்த அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வந்த சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகள், ஆட்சிமாற்றத்துக்கு உதவிய தமிழ் மக்களின் பிரச்சினைகளின் மீதான கரிசனைகளைக் குறைத்திருக்கின்றன.

அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்திருந்தால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளும் சூழல்களும் உருவாக்கப்பட்டிருக்கும்.

அதற்கு மாறாக, அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே சர்வதேச பிராந்திய சக்திகள் கவனம் செலுத்தி வருவதானது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்கும் அரசாங்கத்தின் உத்திக்கு இன்னும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய நிலையில், மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பிராந்திய, மற்றும் சர்வதேச சக்திகளின் கவனத்தை மீண்டும் ஈர்ப்பதற்கு சம்பந்தன் முயன்றிருக்கலாம்.

காணிகள் விடுவிப்புத் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா. பொதுச்செயலர், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இதுவும், இந்த விவகாரத்தில் மீண்டும் சர்வதேச தலையீடுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்துகின்ற ஒரு நகர்வு தான்.இதற்கும் அப்பால், அரசாங்கத்துடனான நெருக்கம் தமிழ் மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் அதிகரித்து வருவதையும் சம்பந்தன் உணர்ந்திருக்கலாம்,

அரசாங்கத்துடன் கூடுதல் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிப்பதாக தமிழ் மக்கள் கருதும் நிலையில், ஓர் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வதற்கான எத்தனமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இவையெல்லாம் ஊகங்களாகவே இருந்தாலும், ஆட்சிமாற்றத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவர் என்ற வகையில், சம்பந்தன் அரசாங்கத்தை அவ்வளவு சுலபமாக கைவிட்டுவிட மாட்டார்.

அதுபோல, மஹிந்த ராஜபக்சவுடன் இவர் இலகுவில் கைகோர்த்து விடவும் முடியாது.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தன் நம்புகின்ற அரசியலமைப்பு மாற்றத்துக்கு மஹிந்த ராஜபக்சவின் ஆதரவும் தேவை என்பது அவரது தொடர்ச்சியான வலியுறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படியான நிலையில், அதனை மையப்படுத்தியே, மஹிந்தவுடன், இணைந்து செயற்படுவது பற்றிக் கூறியிருக்க முடியுமே தவிர, ஆட்சியில் சேர்ந்து இயங்குவது பற்றி சம்பந்தன் அவ்வாறு கூறியிருக்க முடியாது.

ஒருவேளை, மஹிந்தவுடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுக்கும் முடிவை சம்பந்தன் எடுப்பாராயின், அது அவருக்கும் கூட்டமைப்புக்கும் கசப்பான விளைவுகளையே ஏற்படுத்தும்.