வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கால் உயிரிழந்த நோயாளி

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

590620334

கிளிநொச்சி – ஆனந்தபுரத்தில் இருந்து கடந்த 18ஆம் திகதி இரவு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளி ஒருவரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு உரிய தருணத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் குறித்த நோயாளி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆனந்தபுரம் பகுதியில் உள்ள எமது வீட்டிலிருந்து நோயாளியை கடந்த 18ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அவரது உடல்நிலையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சைப்பிரிவிற்கு கொண்டு சென்றிருந்தோம்.

இதன்போது அங்கு ஒரு ஆண் உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் கடமையில் இருந்தனர். இருப்பினும் நோயாளிக்கு சிகிச்சை வழங்காது வெளியேற்றி விட்டனர்.

இதனையடுத்து வெளிநோயாளர் பிரிவில் பதிவுகளை மேற்கொண்டு வெளிநோயாளர் பிரிவு வைத்தியரிடம் காட்டுமாறு தெரிவித்தனர். இந்த நிலையில் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் இரவு 11.25 மணிக்கு சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுக்கப்பட்ட போது உயரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சைப்பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கே தங்களுடைய தந்தை இறப்பதற்கு காரணமாக இருந்தது என உயிரிழந்தவரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் தங்களுடைய தந்தையைக் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கந்தையா நிர்மலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கார்த்திகேயனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

உயிரிழந்தவரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வைத்தியசாலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.