ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை

இதற்கமைய ஸ்ரீலங்கா ஆறாவது ஆண்டாகவும் இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் ஸ்ரீலங்காவில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கம் சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்படும் Freedom from Torture என்ற சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு 76 நாடுகளில் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவி வரும் நிலையிலேயே சித்திரவதைகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.

ஸ்ரீலங்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சித்திரவதைகளுக்கு உள்ளான 230 பேருக்கு தாங்கள் உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ள குறித்த சர்வதேச அமைப்பு இதற்கமைய உலக நாடுகளில் அதிகளவிலானோர் சித்திரவதைக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள ஈரானில் 140 சித்திரவதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் உயிர்தப்பியவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமையவே மோசமான சித்திரவதைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை ஸ்ரீலங்கா பிடித்துள்ளதாக Freedom from Torture அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த எண்ணிக்கைகள் 2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திலும் சித்திரவதைகள் கட்டுக்கடங்காது தொடர்கின்றதையே வெளிப்படுத்தி நிற்பதாகவும் Freedom from Torture அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதனால் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்தினால் அங்கு அவர்கள் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள Freedom from Torture அமைப்பு ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்துவதை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கடந்த யூலை மாதம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது விஜயத்தின் இறுதியில் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு பொலிசாரும் இராணுவம் உட்பட முப்படையினரும் இந்த சித்திரவதைகளில் ஈடுபட்டுவருவதுடன் அதனை அவர்கள் நியாயப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.