காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர்

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக அவர். கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில், காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இன்று கையெழுத்திட்டேன். இது நிலையான அமைதிக்கான பாதையில் சிறிலங்காவின் முன்னேற்றத்துக்கான மற்றொரு படியைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் பணியக சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த ஜூன் 21ஆம் நாள் ஒருமனதான நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா அதிபர் இதில் கையெழுத்திட்டதை அடுத்து, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இந்தப் பணியகத்துக்கான தலைவர் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார்.

காணாமல்போனோர் பணியக சட்டம் தனியே, உள்நாட்டுப் போரை மட்டும் கவனத்தில் கொள்ளாது, ஜேவிபி கிளர்ச்சிக் காலங்களும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்தப் பணியகம் சிறிலங்கா அதிபரின் மேற்பார்வையின் கீழ் செயற்படும்.

ஆயுதப்படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த பணியகம் உருவாக்கப்படுவதாக பொதுவான ஒரு கருத்து உள்ளது.

ஆனால் இது மிகவும் வெளிப்படையான சுதந்திரமான ஒரு ஆணைக்குழு. ஆயுதப்படைகளில் உள்ள தவறுகளைச் செய்யாதவர்கள் இதையிட்டு கவலை கொள்ளத் தேவையில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும். இதற்கான நீதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.