இலங்கையை ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் வீழ்த்தியது கிரிக்கெட்டுக்கு நல்லது: அஸ்வின்

asvi

ஜிம்பாப்வே அணி இலங்கையை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மும்பையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் கூறியதாவது:

ஜிம்பாப்வே அணி இலங்கையை வீழ்த்தியதைப் பற்றி கூற வேண்டுமெனில், யார் வேண்டுமானலும் வெல்லலாம், யார் வேண்டுமானலும் தோற்கலாம், இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்றுகிறது. நாளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெறலாம் அப்படித்தான் ஒரு விளையாட்டு செல்ல வேண்டும். இது விளையாட்டுக்கு ஆரோக்கியமானது.

புதிய பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர்கள் பற்றி கருத்துக் கூறுவது என் எல்லைக்குட்பட்டதல்ல. அப்படிப்பட்ட விஷயங்களில் நான் கருத்து கூறுவது இல்லை.

நான் சமயோசிதமாகப் பேசவில்லை, அது குறித்து கருத்துக் கூறுவது நியாயமற்றது. எப்போதும் போலவே இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. போகப்போகத்தான் இது எப்படி பயனளிக்கும் என்று கூற முடியும்.

இவ்வாறு கூறினார் அஸ்வின். 300 விக்கெட்டுகளுக்கு இன்னும் 25 விக்கெட்டுகளே உள்ள நிலையில் இலங்கையில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.