
கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய தொடர்பில் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் ரி-ருவென்ரி லீக் தொடரில், திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன், நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்ற அணியின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இந்த போட்டி தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. டி.என்.பி.எல். தொடர் தமிழக வீரர்களுக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளாக நான் இலங்கை கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை. அதனால் அங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எல்லா அணிகளுக்கும் ஏற்படும் பிரச்சினை தான் இலங்கை அணிக்கும் தற்போது நேர்ந்துள்ளது. விரைவில் அதனை அவர்கள் சரி செய்து விடுவார்கள்.
அடுத்து நடைபெற இருக்கும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. எனினும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்தியாவிடம் தோல்வி கண்ட போட்டியில் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்று முன்னாள் தலைவர் அரஜூன ரணதுங்கா சொல்லி இருப்பது சிலருக்கு இடையிலான பிரச்சினையே காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை’ கூறினார்.
8 அணிகள் மோதும் இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் ரி-ருவென்ரி லீக் தொடர், எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






