
கோவில் கட்டுவதற்காக குழிதோண்டியபோது ரகசிய அறையில் 9 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைன பூரண நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. கிராம மக்கள் சார்பில் கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2 நாட்களாக குழிதோண்டி வருகின்றனர். நேற்று காலை 8.30 மணிக்கு கிராம மக்கள் குழிதோண்டியபோது திடீரென அதில் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்திற்குள் சாமி சிலைகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆத்தூர் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தை தோண்டிப் பார்த்தனர். அங்கு சுமார் 5 அடி ஆழ குழிக்குள் ரகசிய அறை இருந்தது. அதில் 9 சாமி சிலைகள் இருந்ததை கண்டெடுத்தனர்.
அவை 2¼ அடி உயர ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைன பூரண நாராயண பெருமாள் சிலைகளும், ஒரு அடி உயர கருடாழ்வார், திருமங்கையாழ்வார், சக்கரத்தாழ்வார், நின்றபெருமாள், அமர்ந்தபெருமாள் சிலைகளும், ½ அடி உயர பத்மாசன மகாலட்சுமி சிலைகள் என மொத்தம் 9 சிலைகள் இருந்தன.
உலோகத்தால் ஆன இந்த 9 சிலைகளையும் குழியில் இருந்து வெளியே எடுத்தபோது பொதுமக்கள் திரண்டுவந்து பக்தியுடன் பார்த்தனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளுக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நிலவறையில் மறைத்து…
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறும்போது, “9 சிலைகளும் 15 அல்லது 16-ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கோவில் சிலைகள் ஆகும். மன்னர் போர்க்காலத்தில் சாமி சிலைகளை கோவில் வளாகத்தில் குழிதோண்டி நிலவறை அமைத்து பாதுகாப்பான கற்களால் மூடிவைப்பது வழக்கம். திருடர்களிடம் இருந்து பாதுகாக்கவும் நிலவறையில் விலை உயர்ந்த சிலைகளை பாதுகாத்து வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர். அதேபோல் தான் இந்த கோவிலிலும் நிலவறை அமைத்து சிலைகளை வைத்து இருக்கலாம். இவை செப்பு சிலைகளா? அல்லது ஐம்பொன் சிலைகளா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றனர்.