தமிழக சட்டபேரவையில் இன்று பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டனர். குறிப்பாக தொலைநோக்கு திட்டம் 2023ன் கீழ் சில அறிவிப்புகளை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். அதில் குறிப்பாக சிங்கப்பூரில் இருப்பது போலவே சென்னையிலும் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் தொடர்ச்சியாக நடந்து வருவதாக அமைச்சர் சட்டபேரவையில் கூறினார். தனியார் பேருந்துகளில் இருப்பது போலவே இனி அரசு பேருந்துகளிலும் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் இணையவாடிக்கையாளர்களை
கவரும் விதமாக அரசு பேருந்துகளில் வை-பை வசதியும் ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு இது செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.