தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவர்! கொந்தளிக்கும் சம்பந்தன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவருக்குப் புகட்டிய பாடங்களை மறக்காமல் இருந்தால் சரி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் (இரா.சம்பந்தன்) புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்” என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

“கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் சிறுபிள்ளைத்தனமாக எம்மை வசைபாடி வருகின்றனர். இதனைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்களது இந்தக் கருத்துகளுக்கு தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்டுவார்கள். கடந்த இரு தேர்தல்களில் தமிழ் மக்கள் தமது வாக்குகளால் அவருக்குப் பாடம் புகட்டி படுதோல்வியடையச் செய்தமையை அவர்கள் மறக்காமல் இருந்தால் சரி” என்று குறிப்பிட்டார்.

இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், கட்சிகளின் உள்விவகாரம் தொடர்பில் சில விடயங்களை கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் முன் வைத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்,

“புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் நாம் ஒற்றுமையாக ஐக்கியமாக இருந்து, புதிய அரசமைப்பு நிறைவேற பாடுபடவேண்டும்.

சில்லறைத்தனமான பிரச்சினைகளுக்காக நாம் எமக்கிடையே முரண்படக்கூடாது. நாம் தொடர்ந்தும் எமக்குள்ளே முரண்பட்டுக்கொண்டிருந்தால் அது கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு சாதகமாகிவிடும். நாங்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நிதானமாகச் செயற்படவேண்டும். எங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

*வடக்கு அமைச்சர்கள் விவகாரம்*

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் இருவரும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள், “அனந்தி சசிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை இருக்கும் நிலையில் அவரை எப்படி அமைச்சராக நியமிக்கலாம். தமிழரசுக் கட்சியின் தலைவர் அவரை நியமிக்கவேண்டாம் என்று கூறிய பின்னரும், அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று முதலமைச்சர் அவரை அமைச்சராக நியமித்தார்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.),

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அனந்தி சசிதரன். அவருக்கு அமைச்சுப் பதவிக்குரிய தகுதி உள்ளது” என்று பதிலளித்தார்.

கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது 4 அமைச்சர்கள் பற்றி கட்சிகள் பரிந்துரைத்தன. ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் இறுதியாக முடிவெடுத்தார். அதைப்போன்று தற்போதும் சகல கட்சித் தலைவர்களுடனும் முதலமைச்சர் கலந்துரையாடல் நடத்தினார். இறுதியில் அவர்தான் முடிவெடுத்தார்.

வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நான் நேரில் பேசவுள்ளேன். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன் என்று தெரிவித்தார்.

*ஓட்டப்பந்தயம் அல்ல*

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “வடக்கு மாகாண முதலமைச்சர் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ, கூட்டமைப்பினதோ சொல் கேட்கின்றார் இல்லை. அவர் தான் நினைத்தபடியே நடக்கின்றார். அவர் முயல்போல் துள்ளிக் குதித்துக்கொண்டு இருக்கின்றார். இதனை நாம் கவனத்தில் எடுக்காமல், நாம் ஆமை போன்று நகர்ந்து வெற்றி இலக்கை அடையவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “இது ஒன்றும் ஓட்டப்பந்தயம் அல்ல. நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து வெற்றி இலக்கை அடையவேண்டும்” – என்று தெரிவித்தார்.