ஜாகீர்கானின் அறிவுரைதான் எனது சிறப்பான பந்து வீச்சுக்கு காரணம்: உமேஷ் யாதவ்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். 29 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அதன்பின் ஐ.பி.எல். தொடர், சாம்பியன்ஸ் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினார்.

தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் சிறப்பான வகையில் பந்து வீசு வருகிறார்.

நான் சிறப்பான வகையில் பந்து வீசுவதற்கு ஜாகீர்னானின் அறிவுரைதான் காரணம் என்று உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘தவறுகளில் இருந்து நான் தொடர்ச்சியாக பாடம் கற்றுக்கொண்டு வருகிறேன். இளைஞர்களாக உள்ளவர்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், ஜாகீர்கான் ஒரு விஷயம் சொன்னார், அது என்னவெனில், ‘‘ஜூனியராக இருக்கும்போதும், இந்திய அணிக்கு புதிய வீரர்களாக அறிமுகமாகும்போதும், உங்களுடைய தவறுகளில் இருந்து வேகமாக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்பதுதான். அதை நான் முயற்சி செய்து நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் செய்த தவறுகளை உட்கார்ந்து ஆராய்வேன். அடுத்த போட்டியில் அதை சரிசெய்து நடைமுறை படுத்துவேன். அதனால் நேர்மறை முடிவும் கிடைக்கலாம். எதிர்மறையான முடிவும் கிடைக்கலாம். நேர்மறையான முடிவின் மீது அதிக கவனம் செலுத்த முயற்சிப்பேன். வலுவான மற்றும் பலவீனமானவற்றின் புள்ளிகளை குறித்து வைப்பேன். இதுதான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம்’’ என்றார்.