ரவி சாஸ்திரி பயிற்சியாளராக வேண்டும்: இந்திய வீரர்கள் விருப்பம்

அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேருபாடு காரணமாக விலகினார். இதன் காரணமாக அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இப்பதவிக்கு இந்தியாவின் வீரேந்திர சேவாக், லால்சந்த் ராஜ்புட், டோடா கணேஷ் உட்பட ஆறு பேர் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் ரவி சாஸ்திரியை இப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு சச்சின் மற்றும் கோலி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வந்தன.

ரவி சாஸ்திரியும் விண்ணப்பிக்க இருப்பதாக கூறியிருந்தார். இன்று அவர் முறையாக விண்ணப்ப படிவத்தை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக வர வேண்டுமென அணியில் உள்ள வீரர்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியாளருக்கான தேர்வு சச்சின், கங்குலி மற்றும் லக்‌ஷ்மண் தலைமையிலான குழு முன்னிலையில் வருகிற ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது.

ரவிசாஸ்திரி கடந்த 2014-2016-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில் இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. 22 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதோடு ஆசிய கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.