இங்கிலாந்தில் பலியாகிய 5 ஈழத்தமிழர்களின் மரண விசாரணை வழக்கு நிறைவு!

கம்பர்சான்ட் (Camber Sand Beach) என்றுஅழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரை ஒன்றில் ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரண விசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று நேற்றய தினம் நிறைவுக்கு வந்துள்ளது.

இறுதியில் தீர்ப்பை வழங்கிய மரண விசாரணை அதிகாரி, அரச தரப்பின் தவறுகளை மறைத்து, இறந்தவர்கள் மீதே பழியை சுமத்தும் விதத்தில் “விளையாட்டு வினையானது(Misadventre)” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

கடந்த ஜூலை 24 ஆம் திகதி பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய குஸ்ராவோசில் வாடா குறூஸ் காம்பர்சான்ட்சில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதனை அவதானித்த மோகிட் டுபார், வயது 36, அவரைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் இறுதியில் இருவருமே இறந்து போனார்கள்.

இச்சம்பவம் நடந்தது, சரியாக ஒரு மாதத்தில், அதாவது ஆகஸ்ட் 24ஆம் திகதி ஐந்து தமிழ் நண்பர்கள் அதே கடற்கரையில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.

1 copy

தென்மேற்கு லண்டனை சேர்ந்த கென் எனப்படும் கேணுகன் சத்தியானந்தன் வயது 18, இவரது சகோதரரான, கோபி எனப்படும் கோபிகாந்தன் சத்தியநாதன் வயது 22, மற்றும் இவர்களது நண்பர்களான, நிதர்சன் ரவி வயது 22, இந்துசன் சிறிஸ்காந்தராசா வயது 23, குருசாந்த சிறிதவராஜா வயது 27 ஆகிய நண்பர்களே இந்த சம்பவத்தில் இறந்து போனவர்களாவர்.

இவர்கள் சார்பில் சட்டவாளர்களான, பற்றிக் றொச்சி, மாசியாவில்ஸ் ஸ்ருவேட், கிலாரிநெல்சன், ரொலு அக்பிலுசி மற்றும் கீத் குலசேகரம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

வெளிப்பார்வைக்கு மிகவும் அழகாக தென்படும் கம்பர்சான்ட் கடற்கரையில் மிகவும் பயங்கரமான ஆபத்துக்கள் மறைந்துள்ள. ஆழிப்பேரலையால் உருவாகும் மணல் திட்டுக்கள் அங்குவரும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன.

மக்கள் அந்த மணல் திட்டுக்களில் விளையாடும் போது, திடீரெனவரும் அலைகளால் அள்ளிச்செல்லப்படுகின்றனர். அதனால் மக்கள் கடலில் மூழ்கியோ மண்ணில் புதையுண்டோ இறக்க நேரிடுகின்றது.

ஆனால் இது பற்றிபோதிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், உயிர்காப்பு பணியாளர்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியிருந்தனர்.

இதனால் 2012இற்குப் பின்னான நான்கு வருடங்களில் கம்பர்சான்ட் ஒன்பது மரணங்கள் நிகழ்ந்துள்ள.

“இக்கடற்கரை ஆபத்து பிரதேசம் எனவும் இங்கு உயிர்காப்பு பணியாளர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் எனவும் றோயல் தேசிய உயிர்காப்புப் படகுநிறுவனம் (RNLI) 2013 இலும் 2016 இலும் பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும் இதனை புறக்கணித்ததன் மூலம் றோதெர் மாவட்ட சபையின் அதிகாரிகள் கடமை தவறியிருந்தனர். கடந்த ஆகஸ்ட்டில் நடந்த ஐந்து நண்பர்களின் மரணத்தின் பின்னரே அங்கே உயிர்காப்புப் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்” என மூத்த வழக்குரைஞரான பற்றிக் றொச்சி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த ஐந்து நாட்கள் சட்ட விசாரணையில் ஈடுபட்ட மூத்த மரண விசாரணை அதிகாரியான அலன் கிறேஸ் தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு கூறினார்..

“கடற்கரையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 2013இல் றோயல் தேசிய உயிர்காப்புப் படகு நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளில் உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் அடங்கியிருந்தது. ஆனால் இப்பரிந்துரை அமுல்ப்படுத்தப்படவில்லை. அவ்வாறு பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால், இம்மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பது உண்மையில் தெரியாது, ஆனால் தற்போது அங்கே உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.” என கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி கீத் குலசேகரம்..

“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழைத்த பாரதூரமான தவறை சுட்டிக்காட்ட மறுத்தது மட்டுமல்லாமல், இறந்தவர்கள் மீதே பழியை சுமத்தும் விதத்தில் தனது தீர்ப்பை வழங்கியிருப்பது மரண விசாரணை அதிகாரியின் மீதுமிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது, உயிர்களை காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும், உண்மையை மறைக்க முயன்ற மரண விசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்” என தெரிவித்தார்.

2 copy

இறுதியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், குருசாந்த் சிறிதவராஜாவின் சகோதரியான பினுஜா சிறிதவராஜா..

“எங்கள் ஐந்து சகோதரர்களும் கடற்கரையில் பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கையில் தான் அன்றைய தினம் கடற்கரைக்குச் சென்றார்கள். ஆனால் காணாமற்போன சிறுவர்களைத் தான் கடற்கரை ரோந்தினர் தேடிக்கொண்டிருந்தார்கள்.

ஆபத்து பற்றி அவர்கள் நீந்திக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாக நீதிமன்றில் பொய் சாட்சி வழங்கப்பட்டது. கடற்கரையில் கிட்டத்தட்ட 25,000 மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். வெறும் எட்டு அதிகாரிகளே பணியிலிருந்தார்கள். எவ்வாறு இந்த எட்டு அதிகாரிகளால் 25,000 மக்களையும் எச்சரிக்க முடியும்?

3 copy

அன்றைய தினம் உயிர்காப்புப் பணியாளர்கள் யாருமே பணியிலிருக்கவில்லை. நாங்கள் எங்களுக்காக் கதைக்கவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறக்கூடாது என்பதற்காகவே இங்கே கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் சொந்தங்களை நாங்கள் இழந்து விட்டோம். எங்கள் வாழ்க்கை தற்போது அர்த்தமில்லாமலே இருக்கின்றது.

இக் கொடுமை எதிர்காலத்தில் யாருக்கும் நடக்கக்கூடாது. உயிர்காப்புப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துமாறு 2013 இலேயே பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் யாருமே அதற்கு செவிசாய்க்கவில்லை.

எங்களைப் பாதுகாக்கத் தவறியதுடன், எங்களிடம் மன்னிப்புக்கூடக் கேட்காத கவுண்சில் பணியாளர்கள் தங்கள் வேலைகளை இராஜினாமா செய்ய வேண்டும்” என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிகவும் உணர்ச்சிவசமாக கண்ணீருடன் தெரிவித்தனர்.#

tamil