பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ள நிலையில், மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியையும் ஏமாற்றி வாங்க கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. தமிழகத்திற்கு நன்மை செய்யும் போர்வையில் துரோகம் இழைக்க கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வழங்க முடியும் என்று மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மேகதாது அணையில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதற்காக 16.1 டி.எம்.சி தண்ணீர் எடுக்கப்பட இருப்பதாகவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே இந்த தண்ணீர் எடுக்கப்படும் என்றும் கர்நாடகம் கூறியிருக்கிறது. இவை அனைத்தும் மத்திய நீர்வள ஆணையத்தையும், தமிழக அரசையும் ஏமாற்றும் நோக்குடன் அளிக்கப்பட்ட வாக்குறுதி ஆகும். இதை நம்ப முடியாது.
மேகதாட்டுவில் கர்நாடகம் புதிதாக கட்டவுள்ள அணையின் கொள்ளளவு 67.14 டி.எம்.சி ஆகும். இது கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளையும் விட அதிக கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் காவிரியில் 171.73 டி.எம்.சி நீரை கர்நாடகத்தால் சேமித்து வைக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவான 93.74 டி.எம்.சியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து சொந்தத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடகத்தின் நோக்கமாக இருக்குமே தவிர, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருக்காது.
35 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் சூழலில், கர்நாடகத்தின் போலி வாக்குறுதியை நம்பி மேகதாது அணைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், அதன்பின் காவிரியிலிருந்து தண்ணீர் பெறுவதை தமிழகம் மறந்து விட வேண்டியது தான்.
மேகதாது அணை விவகாரம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திரமோடியை 3 முறையும், நீர்வளத்துறை மந்திரி உமாபாரதியை 2 முறையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதல் கடிதம் எதுவும் இணைக்கப்படாத நிலையில், அதை மத்திய அரசு கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். கர்நாடகத்தின் இனிப்பு வார்த்தைகளை நம்பி மத்திய அரசு ஏமாந்து விடக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டு கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு ரூபாய் ஒதுக்கீடு செய்து, தடுப்பு அணைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் ஜூன் 7-ந் தேதி அளித்து அனுமதியையும் நாடும் தீவிர நடவடிக்கையில் கர்நாடக மாநில அரசு இறங்கி உள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் துச்சமாகக் கருதி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் வஞ்சித்து வருகிறது. கர்நாடகம் மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணைகள் கட்டினால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது. ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாமல் காவிரி படுக்கையில் 12 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் தரிசாகிவிடும். வேளாண்மைத் தொழில் முற்றாக அழிந்து, தமிழ்நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்து ஆடும் ஆபத்து நேரிடும்.

பா.ஜ.க.வின் கண் அசைவில் தான் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அரசின் அனுமதியையும் கேட்டுள்ளது. தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பறிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு துணைபோகாமல், மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணைகள் அமைப்பதற்கு மத்திய அரசு நீர்வளத்துறை ஆணையம், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை அளிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.







