லண்டனில் உள்ள 150க்கும் அதிகமான உயர் மாடி குடியிருப்பு கட்டடங்கள், தீ பாதுகாப்பு சோதனை

மேற்கு லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் லண்டனில் உள்ள கட்டடங்களில் தீ பாதுகாப்பு சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக லண்டன் குடியிருப்பு கட்டடங்களில் இருந்தவர்கள் அங்கிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் லண்டனில் உள்ள 150க்கும் அதிகமான உயர் மாடி குடியிருப்பு கட்டடங்கள், தீ பாதுகாப்பு சோதனைகளில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கட்டடங்களில் பெரும்பாலானவை தீ பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக பெறவில்லை என பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

80 பேரை பலியெடுத்த Grenfell கட்டட தீ அனர்த்தம் தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களும் ஊடகங்களும் அனுமதிக்கப்படாமை குறித்து அவரிடம் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க சில கூட்டங்களை தவிர்த்து, ஏனைய அனைத்து கூட்டங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.