முதல் படத்திலேயே நீளமான வசனம் பேசி நடித்த ஷரத்தா ஸ்ரீநாத்

கவுதம் கார்த்திக் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்’. இதை கண்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நடித்தது குறித்து கூறிய நாயகி ‌ஷரத்தா கூறும்போது, “இயக்குனர் கண்ணன் படம் எனக்கு தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்குரியது. இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் வித்தியாசமான பாத்திரம்.

இதில் நான் கடினமாக உழைத்து முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும். கவுதம் கார்த்திக் மிகச்சிறந்த நடிகர். அவர் மிகவும் அமைதியானவர், நல்ல மனிதர், எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார். அப்படி பழகிவிட்டால் உண்மையான நண்பராக இருப்பார்.

‘இவன் தந்திரன்’ கதாநாயகியாக நான் நடிக்கும் முதல் தமிழ்படம். எனவே நீளமான வசனம், உணர்வு பூர்வமான காட்சிகள் சவாலாக இருந்தன. இதில் தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக்கொண்டேன். உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான். ‘இவன் தந்திரன்’ கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்” என்றார்.