பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான சையத் சலாவுதீன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் உள்ளான். இந்தியா மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட இவன் பதன்கோட் தாக்குதலிலும் பங்கேற்றவன். பாகிஸ்தான் உதவியுடன் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகிறான்.
இதற்கிடையே, சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்கர்கள் அவனுடன் எந்த ஒரு தொடர்பையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
அமெரிக்க நீதித்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலாவுதீனுக்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்த பின்னர் இருநாடுகளின் சார்பாக அதிபரின் வெள்ளை மாளிகை ஒரு கூட்டறிக்கை வெளியானது.
இந்தியா மீது கொடூரமான தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தானை அந்த கூட்டறிக்கை நேரடியாக குற்றம்சாட்டி இருந்தது.
பாகிஸ்தானில் இருந்துவாறே எல்லை கடந்த தீவிரவாதத்தை ஊக்குவித்துவரும் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் பதான்கோட் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை பாகிஸ்தான் நீதியின் முன்னிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்ற வகையில் இந்தியாவுடன் மறைமுக பகையையும் பாகிஸ்தானுடன் பகிரங்க உறவையும் கையாண்டுவரும் சீனா தற்போது அமெரிக்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இன்று கருத்து தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உலக நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தான் மிக தீவிரமாக செயலாற்றி வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டுறவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பாகிஸ்தான் எடுத்துவரும் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தை சர்வதேச சமுதாயம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.