ஆன்மீக மணம் கமழும் ஆடி மாதம்

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள் வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும்.
பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான். இந்த சமயத்தில் ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால் தான் விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி வந்தது.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் அதன்படி பார்த்தால் ஆடி மாதத்தில் தேவர்களின் மாலை நேரம் தொடங்குகிறது. அதனாலும் பூஜைகள் ஆராதனைகள் மிகுந்திருப்பது இயல்புதானே?
சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை கற்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. கடக ராசி சந்திரனுக்குரியது. சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் (ஒன்று சேர்வதால்) ஆளுமை பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சிவம் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். எனவே சிவனை விட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது.
ஒரு கல்ப காலத்தில் ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி. மலைரசன் மகளாக பிறந்தால் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோயில்கள் குறிப்பாக மாரியம்மன் கோயில்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்று காணப்படும் கூழ் வார்த்தலும், பூக்குழி இறங்குதலுமாக களை கட்டி விடும். விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதம் இது.
இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது?
ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதகமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
ஆடிசெவ்வாய்: ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது என்பது பழஞ்சொல். இதிலிருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேர்த்து நீராடுதலில் முக்கியத்துவம் விளங்கும் அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு, தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடிச்செவ்வாயில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது.இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார். பின்னர் பூஜை நடக்கும் அன்று உப்பில்லாமல் அரிசிமாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறு நாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம். இந்த பூனை பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்க கூடாது என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது.
இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர்,. மணமாகாத கன்னியர்க்கும் குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம்.
ஆடிவெள்ளி: இந்த நாளன்று மஞ்சள் தேய்த்துநீராடி மாக்கோலம் போட்டு திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றி லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு மஞ்சள் குங்குமம் அட்சதை சீட்டு, தோடு, கண்ணாடி வளையல்,ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடல் வெகு சிறப்பான பலன் தரும். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.
அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி ரவுத்திரி, சேட்டை, வாமை, ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுத்தல் வழக்கத்துக்கு வந்தது.
ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது சக்திகளையும் ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும்.
சக்தி பீடங்களில் ஒன்றென கருதப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் ஆடி வெள்ளி மிகவும் விசேஷமாகும். இங்கு அம்மன் மாணவியாக இருக்க ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்தருளினார். அதனால் பள்ளிக்குழந்தைகள் இங்கு ஆடி வெள்ளி அன்று வேண்டிக்கொண்டால் ஞாபக சக்தி மிகுந்து வரும். ஆடி வெள்ளி ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்ற, வாழ்வு ஒளி பெறும்.
ஆடிப்பௌர்ணமி: சங்கரன்கோயில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்கிரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பக்தியோடு பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள், ஆடித்தபசு இந்த நாளில் லட்சக்கணக்கான பக்திகள் கூடுவார்கள். ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.
திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் பெருமான், ஆடிப்பௌர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.
ஹயக்கீரீவ அவதாரம்: வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர். மது. கைடபர் என்ற இரு அசுரர்கள், அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டார். கடுங்கோபம் கொண்ட திருமால், குதிரை முகத்துடன் ஹயக்கரீவராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப்பௌர்ணமி. போர் முடிந்த பின்னரும் தணியாத ஹயக்கிரீவரின் சீற்றத்தை தணிவிக்க மலர்மகள் அவரது மடியில் சென்றமர்ந்து அவரை துதித்தாள். அன்று முதல் லட்சுமி ஹயக்கிரீவ வழிபாடு பிரபலமடைந்தது.
வேதங்களை மீட்டு வந்ததால் கல்விக்கு அதிபதி இவர். நிறைய மதிப்பெண்கள் பெற மாணவர்கள் ஹயக்கிரீவரை வணங்கி விட்டு முழுமையான முயற்சியுடன் படித்தால் நிச்சயம் பலன் கிட்டும்.201706271511001016_muthumariamman-slokas_SECVPF