ஹிட்லரின் மறு அவதாரம் டிரம்ப்: கடுமையாக விமர்சித்த வட கொரியா

சர்வாதிகாரி ஹிட்லரின் மறு அவதாரம் தான் டொனால்டு டிரம்ப் என வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நாவின் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இது தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. பிராந்தியத்தில் தென் கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. பல்வேறு முறை அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

வடகொரியாவால் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ 18 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், திடீரென மரணமடைந்தார்.

இதற்கு வடகொரியா தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், இதை மறுத்த வடகொரியா டிரம்பை பைத்தியம் என விமர்சித்தது.

தற்போது கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டிரம்பின் முக்கிய கொள்கைகளை 21ஆம் நூற்றாண்டில் நாசிசம் என விமர்சித்துள்ளது.

மேலும், ஹிட்லரின் மறு அவதாரம் டிரம்ப் எனவும் ஹிட்லரின் சர்வாதிகார கொள்கைகளை அவர் பின்பற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தென் கொரியாவின் ஜனாதிபதி பார்க் கீன்-ஹையை விபச்சாரி என வடகொரியா விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.