ரஷிய விவகாரங்களில் ஒபாமா சரியாக செயல்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டு

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா ரகசியமாக தலையிட்டு தேர்தல் முடிவை சீர்குலைத்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் ஆவதை விரும்பாத ரஷியா, கம்ப்யூட்டர் ஹேக்கிங் மூலம் அமெரிக்க இணையதளங்களுக்குள் புகுந்து ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக மாற்றங்களை செய்ததாகவும், பிரசார யுத்திகளில் குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ரஷியா இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இது சம்பந்தமாக அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தேர்தல் தொடர்பாக ரஷியா தலையிட்டு மோசடி செயல்களை செய்ததாக கூறுகின்றனர். அப்போது அதிபராக இருந்த ஒபாமாவுக்கு என்ன நடந்தது? என்பது தெரியும்.

ஆனால், ரஷியாவின் நடவடிக்கைகளை அவர் கட்டுப்படுத்த தவறி விட்டார். குறிப்பாக ரஷிய விவகாரங்களில் ஒபாமா சரியாக செயல்படவில்லை. அவருடைய செயல்பாடுகள் பலனற்றவையாக இருந்துள்ளன என்று டிரம்ப் கூறினார்.