வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் ஈரானுக்கு கட்டார் உதவி செய்வதாக குற்றம் சாட்டிய சில வளைகுடா நாடுகள், கட்டாருடான உறவை தவிர்த்துள்ளன.
பிராந்திய நாடுகளின் புறக்கணிப்பானது தமது நாட்டு குடிமக்களுக்கு அல்லது நாட்டின் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாதென கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதே அதன் அழுத்தங்களை உணர முடிவதாக அங்கு வாழும் இலங்கை ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயங்களினால் கட்டாருக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும், கட்டாருடன் வர்த்தக தொடர்புகளை கைவிட்டமையினால் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக குறித்த இரண்டு நாடுகள் மற்றும் எகிப்து, பஹ்ரேன் மற்றும் யெமன் ஆகிய நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளின் காரணமாக சிறிய அளவிலான தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையும் ஆபத்திற்குள்ளாகியுள்ளதாக டோஹா நிறுவனம் ஒன்றில் சேவை செய்யும் இலங்கையர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளுக்கு வரும் தேவையான பொருட்கள் பெருமளவு குறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக தான் பணியாற்றும் தொழிற்சாலையில் இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே பொருட்கள் உள்ளதாகவும், அதற்கு மேல் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியினால் கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார்.
140000 இலங்கையர்கள் கட்டாரில் தொழில் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையர்களின் தொழிலுக்கு எவ்வித நேரடி பாதிப்பும் ஒரே நேரத்தில் ஏற்படாதென்ற போதிலும், நீண்டகால தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக டோஹா நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.







