அதிமுக அணிகள் இணையவே இணையாது… டெல்லியில் உறுதிபடுத்திய ஓபிஎஸ்!!

ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவில் உள்ள 3 அணிகளும் ஒட்டு மொத்தமாக ஆதரவு தெரிவித்தாலும், அணிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. காரணம் ஓபிஎஸ் அணியில் உள்ள அந்த எம்.பியும், மாஜி அமைச்சர்களும்தானாம்.

பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்த ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்தார். அவரை நம்பி சில எம்எல்ஏக்கள் சென்றனர். சசிகலா ஜெயிலுக்கு போக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை அடிபட்டது. ஆனால் அணிகளில் உள்ளவர்களின் கிண்டல், கேலி பேச்சுக்களால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அமைச்சர்களுக்கு சில டிப்ஸ்களை கொடுக்கிறார் ஓபிஎஸ்.

தர்மயுத்த பயணம் சென்று வந்த ஓபிஎஸ் மேடைகளில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமியை தாக்கியும் பேசினார். அதே நேரத்தில் அணிகளை இணைத்து விடலாமா என்று ஆலோசனையும் செய்தாராம்.

அதற்கு எம்.பி மைத்ரேயன்தான் முதலில் தடை போட்டாராம். மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க. நான் ஒரு தனியார் சர்வே டீமை வெச்சு தமிழ்நாடு முழுக்க சர்வே பண்ணி தரச் சொன்னேன். அதில் இணைப்பு சரிப்பட்டு வராது என்று தெரியவந்துள்ளது என்றாராம்.

சசிகலா, டிடிவி தினகரனை ஏற்றுக்கொண்டு நாமும் அங்கே போய் சேர்ந்தால் மக்கள்கிட்டயும் கெட்ட பெயரைத்தான் சம்பாதிப்போம். அதனால அவங்களோட சேருவதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம் என்று கூறி ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை குழு கலைக்கப்பட்டதாக கூறிய ஓபிஎஸ், பேச்சுவார்த்தைக்கு அவசியமே இல்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை ஆட்சி கலையும் பட்சத்தில் தனி அணியாக தேர்தலில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளாராம்.