மீண்டும் முதலமைச்சராக சீ.வி? வலுக்கும் எதிர்ப்புகள்

வடமாகாண சபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

நேற்றைய கூட்டத்தின் போது வடமாகாண சபை விவகாரம் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை தொடர்ந்து இரு தரப்புகளுக்கு இடையிலான கடிதத்தொடர்பு குறித்து இரா.சம்பந்தன் தெளிவுப்படுத்தியிருந்தார்.

அத்துடன், வடமாகாண அமைச்சர்களை 2013ஆம் ஆண்டு முதலமைச்சரே நியமித்திருந்ததாகவும் இரா.சம்பந்தன் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த வகையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் வடமாகாண விவசாய அமைச்சராக பொ.ஐங்கரநேசன் நியமிக்கப்பட்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், தமிழரசு கட்சியே பொ.ஐங்கரநேசனை நியமித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “வடக்கு மாகாணசபையின் அடுத்த முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரனை நியமிக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

அத்துடன், சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பங்காளிக் கட்சிகள் மூன்றும் தாங்கள் வெளியேறுவோம் என்று எச்சரிக்கை விடுப்பார்கள்.

இறுதியில் விக்னேஸ்வரனையே வடமாகாண சபை முதலமைச்சராக நியமிப்பீர்கள்” என தெரிவித்தார்.

எனினும், மீளவும், முதலமைச்சராக விக்னேஸ்வரனை நியமித்தால் அதனை ஏற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.