நாகதோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலம் திருப்பாம்புரம்

சிவபெருமான் கொடுத்த சாபத்தால் தங்கள் சக்திகள் அனைத்தையும் இழந்த நாக இனத்தினர், தங்கள் சக்திகளைத் திரும்பப் பெற்ற இடம் திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவில் ஆகும்.

சிவபெருமான் கொடுத்த சாபத்தால் தங்கள் சக்திகள் அனைத்தையும் இழந்த நாக இனத்தினர், தங்கள் சக்திகளைத் திரும்பப் பெற்ற இடம் திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவில் ஆகும். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் பேரளம் என்ற ஊரில் இருந்து மேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள இறைவனுக்கு பாம்புபுரேஸ்வரர் எனும் பெயர் தவிர, ‘பாம்புரநாதர், சேஷபுரீஸ்வரர்’ எனும் வேறு பெயர்களும் உண்டு. இங்கு இருக்கும் அம்மன் வண்டமர் பூங்குழலியம்மை என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றவர்கள் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டிருக்கின்றனர். இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார். கங்கையின் பாவத்தையும், சந்திரனின் பழியையும் நீக்கிய பெருமை இத்தலத்திற்கு இருக்கிறது.

இங்கு ராகுவும், கேதுவும் ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாகூர், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் போன்ற நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.