2018-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை ரத்து: 2020-ல் நடத்தப்படுகிறது

கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2010), இலங்கை (2012), வங்காள தேசம் (2014), இந்தியா (2016) ஆகிய நாடுகளில் டி20 உலகக்கோப்பை நடத்தப்பட்டது.

அடுத்த வருடம் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். ஆனால், முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாட்டிற்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்த வருடம் டி20 கிரிக்கெட் நடத்துவதில்லை என்று ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. 2018-ற்குப் பதிலாக 2020-ல் தொடரை நடத்த ஐ.சி.சி. முன்வந்துள்ளது. தொடர் எந்த நாட்டில் நடத்தப்படும் என்று இன்னும் முடிவாகவில்லை. தென்ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் தொடர் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.