விக்னேஸ்வரனுக்கு சுயமாக சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத சூழல் நிலவியது!

வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த முடிவு மக்கள் மத்தியில் திருப்தி அடையசெய்துள்ளது என்றே சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மன்னர் காலத்தை அடுத்து ஈழத்தில் தமிழர்களுக்கென அமையப் பெற்ற உள்ளூர் அரசான வடக்கு மாகாண சபையின் முதல்வர் கௌரவ நீதிபதி க.வி. விக்னேஸ்வரனின் மக்கள் நலன் சார்ந்த முடிவு வடக்கு மக்களை திருப்தியடைய செய்துள்ளது.

கட்சி பேதங்கள் செல்வாக்குகள் சரி பிழைகள் என்பனவற்றுக்கு அப்பால் இதுவரை இலங்கை அரசியல் வரலாற்றில் இல்லாத அளவில் தனது அமைச்சு முதலான அனைத்து அமைச்சர்களையும் சுய மதிப்பீடு செய்தமையும் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவினை சுதந்திரமாக வெளிப்படுத்தியமையும் அவரின் பெயரில் இருந்த நன்மதிப்பையும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் அமைய பெற்ற வடக்கு மாகாண சபையின் ஒரு உறுப்பினராகதான் இருந்த போது முதலமைச்சரினால் சுயமாக சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியாத சூழல் நிலவியதாகவே நான் நம்புகிறேன்.

இதனால் மக்கள் ஒரு வித அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள். ஆனால் இப்போது சூழலை உணர்ந்து அவரால் எடுக்கப்பட்ட முடிவினை மக்கள் வரவேற்கின்றனர்.

இவரது வழியை பின்பற்றி வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள், அதிகாரிகள் செயற்பட்டால் எமது மக்களை அடுத்த நிலைக்கு இலகுவாக வழிப்படுத்தலாம் எனவும் நான் நம்புகிறேன்.

வடக்கு முதலமைச்சரது மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான முடிவுகளை நானும் எப்போதும் வரவேற்பவனாகவும் அதில் திருப்தி அடைபவனாகவும் இருக்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.