நாடு வல்லரசாவதைவிட விவசாயிகள் வாழக்கூடிய நல்ல அரசாக மாறவேண்டும்: விஜய்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் பேசும்போது,

“நான் நல்லா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். ஆனா, நாம எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற விவசாயிகள் நல்லா இல்லைங்க. இன்றைக்கு விருது வாங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் அது அவங்க உழைப்புக்கு கிடைச்ச பலன். ஆனா எந்த பலனும் கிடைக்காம இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளை நினைத்தால் கொஞ்சம் வலிக்கிறது.

உணவு, உடை, இருப்பிடம் இதில் உணவுக்குத்தான் முதலிடத்தை கொடுக்கிறோம். ஆனால் அதைக் கொடுக்கிற விவசாயிக்கு எதையும் கொடுக்கிறது கிடையாது. பசி ஈசியாக தீர்ந்துவிடுவதால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி நினைக்கிறது கிடையாதோ என்று ஒரு எண்ணத் தோன்றுகிறது.

காசு கொடுத்தால்கூட சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காது என்கிற ஒரு நிலைமை வந்தால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி புரிந்துகொள்வோம். இது அவசியம் என்பதைவிட அவரசமும் கூட. நமக்கு ஏற்கெனவே ஆரோக்கியமில்லாத உணவுகள்தான் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போதுகூட நாம் முழித்துக் கொள்ளாவிட்டால் அடுத்த சந்ததிக்கு இதுகூட கிடைக்காது.

ஒரு நகைக்கடை அதிபர் வேறொரு நகைக் கடையில் போய் நகை வாங்க மாட்டார். ஒரு ஜவுளிக்கடை அதிபர் மற்றொரு ஜவுளிக்கடையில் போய் துணி எடுக்கமாட்டார். ஆனால், ஒரு விவசாயிதான் ரேஷன்கடையில் வரிசையில் நிற்கிறான் இலவச அரிசிக்காக.

இந்தியா வல்லரசாகவேண்டும் என்பதெல்லாம் அடுத்ததுதான். முதலில் விவசாயிகள் நன்றாக வாழக்கூடிய அரசாக மாறவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.