சாம்பியன்ஸ் டிராபி: மூன்று ஆசிய அணிகள் அரையிறுதிக்கு நுழைந்து அசத்தல்

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகின்றன. கடந்த 1-ந்தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இங்கிலாந்து மண்ணில் பந்து அதிக அளவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும் என்பதால் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய ஐந்து அணிகளில் நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணித்தார்கள்.

ஆனால் மழைக் குறுக்கீட்டால் ஆஸ்திரேலியா பரிதாபமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாகிஸ்தானிடம் தென்ஆப்பிரிக்கா வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்கா அணி வெளியேற நேர்ந்தது. நியூசிலாந்துக்கு வங்காள தேசம் அதிர்ச்சி அளித்ததால் நியூசிலாந்தும் வெளியேறியது.

மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் இந்தியா, வங்காள தேசமும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்று நடைபெறும் பாகிஸ்தான் – இலங்கை போட்டியில் வெற்றி பெறும் அணியும் அரையிறுதிக்கு முன்னேறும். இதன்மூலம் இந்தியா, வங்காளதேசம் அணிகளுடன் மூன்றாவது ஆசிய அணியாக பாகிஸ்தான் அல்லது இலங்கை அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அல்லது இலங்கை அணியுடன் மோதும் வாய்ப்புள்ளது. இதில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தால் ஆசிய நாடுகளில் ஒன்று கோப்பையை வெல்வது உறுதியாகிவிடும்.