25-ந்தேதி அமெரிக்கா பயணம்: டொனால்டு டிரம்பை மோடி சந்திக்கிறார்

பிரதமர் நரேந்திரமோடி இந்த மாதம் 25, 26-ந்தேதிகளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதற்கு பிறகு மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்கிறார். எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச முடிவு செய்தார்.

இதுவரை இந்த சந்திப்பு பற்றி இறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது மோடி, டொனால்டு டிரம்ப்பை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியில் எந்த நேரத்தில் சந்திப்பார் என்பது பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

டொனால்டு டிரம்ப்பை சந்திக்கும்போது, பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் உள்ள உறவு மேம்பாடு பற்றியும், வர்த்தக மேம்பாடு பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் பேச உள்ளனர்.