சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் கட்சியை வழிநடத்தினார்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பின்னர் சசிகலா அணி எடப்பாடி பழனிசாமி அணி என்று அழைக்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி அணியும் இணைவதற்கு வசதியாக சசிகலாவும், தினகரனும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக எடப்பாடி அணியினர் அறிவித்தனர். இதன் பின்னர் ஆட்சியையும், கட்சியையும் எடப்பாடி பழனிசாமியே வழிநடத்தினார்.
இந்த நிலையில் 34 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரன் மீண்டும் பணியை தொடர்வேன் என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இதனால் தினகரன் தனி அணியாக இயங்கி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 33 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் ஆகியோர் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சசிகலா, தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார்.

பொதுக் கூட்டங்களில் பேசும் ஓ.பன்னீர் செல்வம் கட்சியையும், ஆட்சியையும் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து மீட்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்கிற கருத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பதிய வைத்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தினகரன் களம் இறங்க திட்டமிட்டுள்ளார். தினகரனின் சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, கட்சியினரின் அன்பான வேண்டுகோளை ஏற்று தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதனை எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.
தினகரனின் இந்த சூறாவளி சுற்றுப்பயணத்துக்கான பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அது முடிவடைந்ததும் தினகரன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களை திரட்டுகிறார்.
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளை சந்தித்தும் தினகரன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தினகரன் தனது சுற்றுப் பயணத்தை மதுரையில் இருந்து தொடங்குவார் என்று தெரிகிறது. தொடக்க நாள் அன்று மதுரையில் மாநாடு போல பொதுக் கூட்டம் நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசும் தினகரன், மாவட்டம்தோறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
இந்த மாத இறுதியில், அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தினகரன் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் தினகரன், அரசியல் களத்தில் தான் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தி பேசுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் ஓ.பி.எஸ். அணியினர் துரோகம் செய்துவிட்டு தனி அணியாக பிரிந்து சென்றது பற்றியும் தினகரன் விரிவாக விளக்கி பேசுவார் என்றும் அவர்கள் கூறினார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த தினகரன் அமைச்சர்களின் கருத்துக்களுக்கு எதிராக கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருப்பது அ.தி.மு.க.வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







