எதிரணியை எளிதாக கருதக்கூடாது: வீரர்களுக்கு விராட்கோலி எச்சரிக்கை

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை மோதின.

முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. ஷிகர் தவான் (123 ரன்) சதம் அடித்தார்.

ரோகித்சர்மா 78 ரன்னும், டோனி 63 ரன்னும் எடுத்தனர். கடினமான இலக்குடன் விளையாடிய இலங்கைக்கு குண தில்சா (76 ரன்), குசல் மென்டிஸ் (89 ரன்) குவித்தனர்.

கடைசி கட்டத்தில் கேப்டன் மேத்யூஸ், குண ரத்னே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

அந்த அணி 48.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 322 ரன் எடுத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் மட்டுமே கைப்பற்றியது. புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார். மீதி 2 விக்கெட்டும் ரன் அவுட்டாகும்.

பிரதான பந்து வீச்சாளர்கள் யாரும் விக்கெட் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தனர். 300 ரன்னுக்கு மேல் குவித்தும் தோற்றதற்கு பந்து வீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததே காரணம்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் போதுமான ரன்களை குவித்தோம். எங்களது பந்து வீச்சாளர்களை நம்பினோம். ஆனால் இலங்கை சிறப்பாக பேட்டிங் செய்து விட்டது. அவர்கள் உத்வேகத்தை இழக்காமல் நல்ல ஷாட்டுகளை அடித்தனர்.

நாங்கள் ஒன்றும் வெல்ல முடியாத அணி அல்ல. எங்களது பந்து வீச்சாளர்கள் நன்றாகத்தான் வீசினார்கள். ஆனால் அதை சரியாக செயல்படுத்தவில்லை.

எந்த ஒரு அணியையும் எளிதாக எடுத்து கொள்ள கூடாது. அது போன்று நினைத்து விளையாடினால் எதையும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் 11-ந் தேதி மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

ஒரு வேளை போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா 3 புள்ளிகளுடன் இருக்கும்.

இந்தியாவுக்கு ரன் ரேட் (+1.272) நல்ல நிலையில் இருப்பதால் அரை இறுதிக்கு முன்னேறும்.