எல்லையில் ஒரு துப்பாக்கி குண்டுகூட வெடிக்கவில்லை: மோடியின் கருத்துக்கு சீனா ஆதரவு

இந்திய பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா சென்ற மோடி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார்.

அப்போது, “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது உண்மை தான். ஆனால், கடந்த 40 வருடங்களில், எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கப்படவில்லை” என்று மோடி பேசினார்.

இந்நிலையில், எல்லைப் பிரச்சனை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா கூறுகையில், “இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ள எல்லைப் பிரச்சனை பற்றிய நேர்மறையான கருத்தினை கவனித்தோம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். எல்லை பிரச்சனை பற்றிய கேள்விக்கு இருநாடுகளின் தலைவர்களும் முறையான கவனம் செலுத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் சந்தித்துக் கொண்ட போது தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்” என்றார்.