இனவாத கருத்துக்களால் அவமானமடைந்த இந்திய வம்சாவளி ஸ்பெல்லிங் பீ சாம்பியன் சிறுமி

அமெரிக்காவில் இந்தாண்டுக்கான ஸ்பெல்லிங் பீ சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி சிறுமி அனன்யா வினய், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இனவாத கருத்துக்களை சந்தித்து அவமானமடைந்துள்ளார்.

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ‘ஸ்பெல்லிங்’ சொல்லும், ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நூற்றுக் கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.
இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 291 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியாக, 15 பேர் மட்டும், இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய் மற்றும் ரோஹன் ராஜீவ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கனடாவில் வசிக்கும் அனன்யா வினய், போட்டியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு, 40 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனன்யாவுக்கு ஒரு வார்த்தை வழங்கி சரியான ஸ்பெல்லிங் தெரிவிக்குமாறு கூறினர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ’கொடுக்கப்பட்ட வார்த்தையை கண்டுபிடிக்காமல், நீங்கள் (அனன்யா) வார்த்தையின் ரசிகர்கள் என்று கூறக்கூடாது’ என்றனர்.

மேலும், ’அனன்யா இந்திய வம்சாவளி என்பதால் சமஸ்கிருதம் மட்டுமே பழக்கப்பட்டவர்’ என தங்களுக்கு தோன்றுவதாக தொகுப்பாளர்கள் கூறி அவமானப்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.