ஊடகவியலாளர்கள் இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு உருவாகியிருக்காது: பா.அரியநேத்திரன்

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அன்று முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாகி இராது.

இன்று சர்வதேசம் பேசும் பொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறி இருப்பதற்கும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களின் முயற்சி தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கடந்த 2004 மே மாதம் 31ம் திகதி மகிந்த அரசின் காலத்தில் ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐயாத்துரை நடேசன் அவர்களின் 13,வது ஆண்டு நினைவு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் காந்திபூங்காவில் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்ட அரியநேத்திரன் மேலும் கூறுகையில்,

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்தபோதும் இதுவரை கொலை செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்படவும் இல்லை. நீதிவிசாரணை இடம்பெறவும் இல்லை.

நாட்டுப்பற்றாளர் நடேசன் சிறந்த ஊடகவியலாளராகவும் நேர்மையான அரச உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றினார். அவரை எனக்கு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் நன்கு தெரியும்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தில் என்னுடன் இணைந்து பல பணிகளை செய்துள்ளார். அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் உபதலைவராகவும் தற்போது சுவிசில் புலம்பெயர்ந்துள்ள இரா.துரைரெட்ணம் தலைவராகவும், அதே நாட்டில் புலம் பெயர்ந்துள்ள சண் தவராசா செயலாளராகவும் நான் (அரியநேத்திரன்) பொருளாளராகவும் மாமனிதர் சிவராம் ஆலோசகராகவும் இருந்தவேளையில்,

2000ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கான பல சுற்றுப்பேச்சுவார்தைகள் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க மூலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாராம் பெறப்பட்டு, விடுதலை இயக்கங்களாக இருந்து அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் இயக்கங்களுடனும் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்களுடனும் தமிழ் காங்கிரஸ் கட்சி தவைவர்களுடனும் பலசுற்றுப் பேச்சு வார்தைகள் இடம்பெற்று 2001ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி உத்தியோக பூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களின் பணி வெறுமனமே செய்திகளை வழங்குவதற்கு அப்பால் தாம் சார்ந்த இனத்திற்கான அரசியல் பலத்தையும் உருவாக்கமுடியும் என்ற விடயத்தை செய்து

காட்டிய பெருமை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நிரூபித்து காட்டியது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அன்று அந்த முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாகி இராது.

இன்று சர்வதேசம் பேசும்பொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறி இருப்பதற்கும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களின் முயற்சிதான் என்பதை கூறுவதில் நான் பெருமையடைகிறேன்.

மாமனிதர் சிவராம் படுகொலைசெய்யப்பட்டு சரியாக நாட்டுப்பற்றாளர் நடேசன் கடந்த 2004 மே 31ல் படுகொலை செய்யப்பட்டார்.

இவரின் படுகொலை நடந்த காலம் மிகவும் பயங்கரமான அச்சசூழ்நிலை வெள்ளை வான் கடத்தல், ஒட்டுக்குழு அராஜகம் நிரம்பிய காலமாகும்.

அதனால் மட்டகளப்பில் இருந்து எஞ்சிய தமிழ் ஊடகவியலாளர்களும் நாட்டில் வாழ முடியாமல் புலம்பெயர்ந்தனர். அதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல, இலங்கையில் இருந்தும் சுமார் 22, ஊடகவியலாளர்கள் இலங்கையில் வாழமுடியாமல் வெளி நாடுகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

2004ம் ஆண்டு தொடக்கம் 2015 வரை பல ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டும், ஊடகங்கள் தாக்கப்பட்டு ஊடகத்துறைகளில் வேலை செய்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் என்று மில்லாதவாறு அதிகரித்தன.

1982ம்ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் ஏறக்குறைய 46,ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட வரலாறுகள் இல்லை.

அதில் கூடுதலாக தமிழ் ஊடகவியலாளர்களே படுகொலை செய்யப்பட்டதை நாம் மறுக்க முடியாது.

இன்று நல்லாட்சி அரசிலும் ஊடக சுதந்திரம் உதட்டளவில் பேசப்படுகிறதே தவிர, உள்ளாந்தமாக ஊடக சுதந்திரம் இல்லை.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இப்போதும் நடமாட முடியாமல் பல அச்சுறுத்தல்கள் இருப்பதை காண முடிகிறது.

நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டபோது மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் பலர் வாழ்வா, சாவா என அச்சத்துடன் மட்டக்களப்பில் இலைமறை காயாக உயிரை பணயம் வைத்து வாழ்ந்த வரலாறுகளையும் நாம் மறக்க முடியாது.

இன்றுள்ள நிலைமைகளையும் அன்றிருந்த பயங்கர நிலைமைகளையும் இந்த தினத்தில் மீட்டுப்பார்ப்பது நல்லது.

இன்று 13,வருடங்கள் கடந்தநிலையில் நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களை நினைவுகூரக்கூடிய சூழல் மட்டுமே உருவாகியுள்ளது. அவரின் படுகொலைக்கான நீதி இல்லாத நிலைதான் இன்றும் தொடர்கிறது என அரியநேத்திரன் கூறினார்.