வடக்கு முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை: மன விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் பட்டதாரிகள்!!

நாங்கள் பல நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் மன விரக்தியின் உச்சத்தில் தான் இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தோம் என வட மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலை பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர அரச வேலைவாய்ப்புக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை(01) 95 ஆவது நாளாகவும் தீர்வின்றி இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது போராட்டம் 95 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் எமது போராட்டம் நூறாவது நாளை எட்டவுள்ளது. இதுவரை எமக்குச் சாதகமான தீர்வினை மத்திய அரசாங்கமோ, மாகாண அரசாங்கங்களோ வழங்காத நிலையில் நாம் மன வேதனைக்குள்ளாகியுள்ளோம்.

கடந்த-25 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வின் போது மே மாதம் -09 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் 92 ஆவது அமர்வில் பட்டதாரிகள் மாகாண சபையின் வாயில்களை மூடி முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டமை, இதன் காரணமாக மாகாண சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் உள்ளே செல்ல விடாது தடுக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அவைத்தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் பல நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் மன விரக்தியின் உச்சத்தில் தான் இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தோம்.

நாங்கள் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் மீது எந்தவொரு காழ்ப்புணர்வு மனப்பான்மையிலும் செயற்படவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பக் கல்வி ஆசிரியர் வெற்றிடங்களிலும், மாகாண சபையில் காணப்படும் ஏனைய வெற்றிடங்களையும் கருத்திற் கொண்டு எமக்கான வேலைவாய்ப்புக்களை மாகாண சபை அரசாங்கம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பெற்றுத் தர வேண்டுமென மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.