2011-ம் ஆண்டே சீல் வைக்கப்பட்டது: சென்னை சில்க்ஸ் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை தி.நகரில் கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தி சென்னை சில்க்ஸ்.

இந்த விபத்தில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதால் இன்று மாலை கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.

இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்துக்கு நான்கு மாடி கட்டவே அனுமதி அளித்ததாகவும், விதிகளை மீறி ஏழு மாடி கட்டியுள்ளதாகவும் வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 2000ம் ஆண்டு நான்கு தளங்கள் கட்டவே தி சென்னை சில்க்சுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விதிமுறைகளை மீறி ஏழு தளங்களை கட்டினர், உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.

2006ம் ஆண்டு அனுமதியின்றி கட்டிய கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கிய போது உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது.

சென்னை சில்க்ஸிற்கு மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2011ம் ஆண்டு சென்னை சில்க்ஸ் உட்பட 25 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை சில்க்ஸ் இதற்கும் தடையாணை பெற்றது, தமிழக அரசு விதிமுறைகளுடன் தான் செயல்பட்டு வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாகவே தி.நகரில் கட்டிட விதிமுறை மீறல் பிரச்சனை உள்ளது, முதல்வருடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.