ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி 3-வது இடம்: பந்து வீச்சில் யாரும் இல்லை

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தர வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 852 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலிக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையில் 22 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

ரோகித் சர்மா 12-வது இடத்திலும், டோனி 13-வது இடத்திலும், தவான் 15-வது இடத்திலும் உள்ளனர். இந்த மூன்று பேரும் சிறப்பாக விளையாடினால் 10 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது.

பந்து வீச்சில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடத்திற்குள் இல்லை. அக்சார் பட்டேல் 11-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 18-வது இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 724 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இம்ரான் தாஹிர் 722 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 701 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் தர வரிசையில் தென்ஆப்பிரிக்கா 122 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 117 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 112 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.