டுபாய் வங்கியில் இருப்பதாகக் கூறப்படும் மஹிந்தவின் கறுப்புப் பணம் மிக விரைவில் மீட்டெடுக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
டுபாய் வங்கியில் மஹிந்தவின் திருட்டுப் பணம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தால் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதாக ரஞ்சித் சொய்சா எம்.பி. தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கூறியதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடி காரணமாகவே அவரது ஆட்சி கவிழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அந்தத் திருடர்களை நாம் கைதுசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. தாமதம் ஆவதால் திருடர்களை நாம் விட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை.
உரிய நேரத்தில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள். மல்வானையில் உள்ள பஸில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மாளிகை ஒன்று இப்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அதுபோல் டுபாய் வங்கியில் இருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் 18.5 பில்லியன் அமெரிக்க டொலர் கறுப்புப் பணமும் மீட்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்படும்.
இதை மிக இலகுவில் செய்துவிட முடியாது. அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இதைச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்பவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் எமது முயற்சி வெற்றிபெறும். எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதற்கு ரஞ்சித் சொய்சா எம்.பி. தயாராகட்டும்” என்று கூறியுள்ளார்.