சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளதை கண்டித்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் வருகிற 3-ந்தேதி கருணாநிதியின் 94-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், சட்டமன்ற பணிகளில் அவரது 60 ஆண்டு வைர விழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதால் அகில இந்திய தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இதற்கான பணியில் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள காரணத்தால் இந்த போராட்டத்தை தமிழக அளவில் நடத்தாமல் முதல் கட்டமாக சென்னையில் நடத்தி இருக்கிறோம்.
இதை குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் இந்த போராட்டம் இன்றுடன் முடியும் போராட்டமாக இல்லாமல் தொடரும் என்பதை சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன்.
மாட்டிறைச்சிக்கு அனுமதித்த காரணத்தால் நாடு முழுவதும் மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி உள்ளனர்.
இப்போது மத்திய அரசு கொடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு முடிந்துள்ளது. இந்த ஆட்சியில் சாதனை என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை. சாதனைக்குப் பதில் வேதனையைத்தான் சந்தித்து உள்ளோம். ஊழலை ஒழிக்க லோக்பால் கொண்டு வருவோம் என்றார்.
வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார்.
இதுவரை 15 ரூபாயாவது ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போட்டாரா? என்றால் இல்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார். அதுவும் இதுவரை இல்லை. இப்போது மாட்டிறைச்சிக்கு தடை போட்டு இருக்கிறார்.
நாம் உண்ணும் உணவை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மோடி எதை விரும்புகிறாரோ அதைத் தான் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், அரசியல் சட்டம் நமக்கு வழங்கிய தனி உரிமை பாதிக்கப்படுவதாகத்தான் கருத முடிகிறது. தனி நபர் சுதந்திரம் பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

மத்திய அரசு மாட்டிறைச்சி சம்பந்தமாக சட்டம் போட முடியாது என்று கோர்ட்டு கூறியுள்ளது. மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதை தள்ளுபடி செய்துள்ளது. மாநில அரசுக்குத்தான் இதற்கான அதிகாரம் உள்ளது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு சட்டம் பிறப்பிக்க என்ன காரணம்?
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டில் எந்த திட்டத்தையும் செய்யாத நிலையில் அதை மூடி மறைக்க மக்களை திசை திருப்ப பா.ஜனதா அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பா.ஜனதா 2014-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும், ஜனநாயகம் செழித்து வளர வேண்டும், இதற்கு அனைத்து முதல்-அமைச்சர்களும், சுத்தமான இந்தியனாக இருந்து பணியாற்றுவார்கள் என்றார்.
ஆனால் இன்று முதல்- அமைச்சர்கள் எல்லோரும் நகராட்சி தலைவர்களாகவும், மாநிலங்கள் அனைத்தும் நகராட்சிகளாகவும் செயல் பட வைத்துள்ளார்.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 6 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 3 முதல்-அமைச்சரை பார்த்து இருக்கிறோம். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார். இந்த 3 பேரும் டெல்லிக்கு சென்று பிரதமரை 5 முறைதான் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். அதில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எல்லாமே நேர்மாறாகத் தான் நடக்கிறது. தலைமைச் செயலகத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கோட்டைக்கு வந்து அமைச்சர்கள் அதிகாரிகளை உட்கார வைத்து ஆய்வு நடத்துகிறார்.
அதோடு அங்கு எச்சரிக்கையும் விடுக்கிறார். ஒழுங்காக செயல்படாவிட்டால் மத்திய அரசின் ஒத்துழைப்பு பெற முடியாது என்கிறார். இந்த நிலையில் இப்போதைய ஆட்சி உள்ளது. ஆனால் கோட்டையில் கொடியேற்றி வைக்கும் உரிமையை கருணாநிதி பெற்றுத்தந்தார். மாநில சுயாட்சி கொண்டு வர நீதிபதி ராஜமன்னார் குழுவை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி.
மத்திய அரசு இப்போது மாட்டிறைச்சி சட்டம் போட்டு 8 நாளாகி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள நாம் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பல மாநில முதல் – அமைச்சர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த செய்தியை முழுமையாக படித்து விட்டு தான் பதில் கூறுவேன் என்கிறார். அனைத்து அமைச்சர்களின் பதிலும் இதுவாகத்தான் உள்ளது.
கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, புதுச்சேரி மாநில முதல்வர்கள் உடனே கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட தோழமை கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். இதையாவது எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து இருப்பாரா? அவருக்கு வருமான வரி சோதனைதான் அடிக்கடி நினைவுக்கு வரும். சி.பி.ஐ. சோதனை மட்டும்தான் நினைவுக்கு வரும்.
ஆர்.கே.நகரில் தேர்தலுக்காக ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்தது. அதில் உள்ள 8 பேர் பட்டியலில் முதல் பெயர் எடப்பாடி பெயராகத்தான் இருந்தது. அந்த அச்சம் காரணமாக அவருக்கு படித்து பார்க்க அச்சம் ஏற்பட்டு இருக்கலாம்.
சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சூரஜ் மாட்டிறைச்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தாக்கப்பட்டு இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. மத்திய ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் உள்ள ஆட்சிக்கும் எச்சரிக்கிறோம். இந்த போராட்டம் முதல் கட்ட போராட்டம்தான். போராட்டம் தொடரும்.
மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை உணர்ந்து பார்த்து மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் மீண்டும் மெரினா புரட்சி தமிழ்நாட்டில் உருவாகும்.
அப்படி உருவாகும் நிலைக்கு நாம் தள்ளப்பட இருக்கிறோம். அதற்கு தயாராக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.







