பங்களாதேஷுக்குள் நுழைந்தது ‘மோரா’!

இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியங்களில கடந்த சில நாட்களாகப் பெய்துவந்த அடைமழை இன்று புதன்கிழமை குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த ‘மோரா’ சூறாவளி பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளதாலேயே சீரற்ற காலநிலை சற்று தணிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வானிலை அதிகாரியான மொஹமட் ஷாலிதின் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலையால் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் அடைமழை கொட்டியது. அதன்பின்னரும் அதிகமழை தொடர்ந்தது. எனினும், “மோரா’ சூறாவளி பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளதால் கடும் மழையும், கடும் காற்றும் குறைவடையும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை வேளைகளில் அதிக மழை பெய்வதற்குரிய சாத்தியம் தென்படுகின்றது.

மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், நாட்டை அண்மித்துள்ள கடற்பிராந்தியங்களிலும் மணிக்கு 60, 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்” என்றார்