தமிழர்களை இந்த நாட்டவர்கள், தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கருதாது அரசு செயற்பட்டு வருகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
நிலமீட்பு தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மக்களுடைய அடிப்படை உரிமைகளை மதிக்காத நிலையாக அல்லது மனிதாபிமானம் அற்ற ஒரு செயற்பாடாகத்தான் அரசாங்கத்தின் செயற்பாட்டைப் பார்க்கின்றேன்.
இறுதி யுத்தத்தில் இந்த அரசால் அள்ளிச் செல்லப்பட்ட நகைகளையோ, வாகனங்களையோ அல்லது தங்களது பெறுமதியான சொத்துக்களையோ கேட்டு இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
அசையாத சொத்தாகவும், தங்களது வாழ்விடமாகவும் உள்ள தங்களின் காணிக்காகத் தான் போராடுகிறார்கள். அவர்களிடம் ஆவணம் உள்ள காணியைத் தான் கேட்கிறார்கள்.
தமிழர்களை இந்த நாட்டவர்கள், தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கருதாது இந்த அரசு செயற்பட்டு வருகிறது.
இது நல்லிணக்கத்திற்கு ஏற்புடையது அல்ல. தென்பகுதியில் குப்பைமேடு சரிந்தவுடன் அரசு விரைந்து செயற்பட்டு, அதற்குரிய பரிகாரங்களை தேடிக் கொண்டது.
நிவாரணம் கொடுப்பது முதல் விசேட பாராளுமன்ற அமர்வை நடத்துவது என சகல நடவடிக்கைகளையும் எடுத்தது.
ஆனால் இதைவிட மோசமாக 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களது மக்களை பாராமுகமாக இருப்பது மிகவும் வேதனையான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







