8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 4-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
தற்போது சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த நிலையில் லண்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, வங்காளதேச அணியை சந்திக்கிறது.
முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி 38.4 ஓவர்களில் நியூசிலாந்து அணியை 189 ரன்னில் சுருட்டியது. வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ்யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட இந்திய வீரர் ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் விராட்கோலி (52 ரன்கள்) அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டோனி 17 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 7 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
மழையால் இந்திய அணியின் இன்னிங்ஸ் 26 ஓவர்களில் முடிவுக்கு வந்ததால் கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
காய்ச்சல் காரணமாக கடந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத யுவராஜ்சிங் இன்னும் முழு உடல் தகுதியை பெற்று விட்டாரா? என்பது தெரியவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
குட்டி அணியாக இருந்தாலும் வங்காளதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் கொண்ட வங்காளதேச அணி களத்தில் கடைசி வரை வெற்றிக்காக போராடும் குணம் கொண்டதாகும். முதல் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் போராடி தோல்வி கண்டது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்து அசத்தியது.
2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய வங்காளதேச அணி, அந்த ஆண்டில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதை மறந்து விட முடியாது. எனவே வங்காளதேச அணி எல்லா வகையிலும் இந்திய அணிக்கு சவால் அளிக்க முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், யுவராஜ்சிங், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், ரஹானே.
வங்காளதேசம்: மோர்தசா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கார், சபிர் ரஹ்மான், மக்முதுல்லா ரியாத், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், ருபெல் ஹூசைன், முஸ்தாபிகுர் ரஹமான், தஸ்கின் அகமது, மெஹதி ஹசன், மொசாடெக் ஹூசைன், சன்ஜாமுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம்.