இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்த நிலைமையிலிருந்து பொதுமக்களை மீட்டெடுப்பதற்கான நிவாரணப் பணிகளுக்கு உதவிகளை வழங்க ஐ.நா. சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இயற்கை அனர்த்த நிலையை சமாளிக்க உதவிகளை வழங்குமாறு அரசாங்கத்தின் சார்பில் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா.சபையின் கொழும்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் ஐ.நா. சபையின் துணை அமைப்புகளான யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, மனிதாபிமான உதவிகளுக்கான ஐ.நா. அலுவலகம் போன்றவற்றின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கிகள், நீரைச்சுத்திகரிப்பதற்கான மாத்திரைகள், இடைத்தங்கல் குடிசைகளை அமைப்பதற்கான தார்ப்பாய்கள், என்பவற்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு வழங்க ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு (WHO) , இலங்கையின் சுகாதார அமைச்சுடன் கைகோர்த்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக உணவுத்திட்டம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் துணை அமைப்பு (UNDP) என்பன அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப தேவையான உலருணவு மற்றும் உதவிகளை வழங்கத் தயார் நிலையில் உள்ளன.
அத்துடன் ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளுக்கான அலுவலகம் (OCHA), மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் மற்றும் ஆளணி வளம் என்பவற்றை வழங்கி அரசாங்கம் மற்றும் தனியார் குழுக்களுடன் இணைந்து மீட்பு , நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக தேவையேற்படுமிடத்து அயல் நாடுகளில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களிலிருந்து ஆளணி வளம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பாதிப்புகளை எதிர்நோக்கும் பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி சேதங்களைக் குறைத்துக் கொள்வதில் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு ஐ.நா. கொழும்பு அலுவலகம் சார்பில் வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.







