தேச துரோக வழக்கில் கைதாகி சிறை சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, 52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு சென்னை புழல் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை முழு அமாவாசை நாளில் ஜாமீனில் வெளியே வருகிறார். அவரது அடுத்த திட்டம் அதிரடியாக இருக்கும் என்று மதிமுகவினர் கூறி வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பல ஆண்டுகளாக தேச துரோக வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இந்த வழக்கில் தானாக முன் வந்து ஆஜரான வைகோ, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விரும்பினால் ஜாமீனில் செல்லலாம் என்று நீதிபதி கூறியும் அவர் செல்ல மறுத்துவிட்டார். புழல் சிறைக்குச் சென்ற வைகோவை, முன்னாள் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் திருமாவும் முத்தரசனும் சந்தித்து பேசினர். ஜாமீனில் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். நண்பர்களும் பிணையில் வாருங்கள் என்றனர்.
3 முறை அவரை ஜாமினில் வெளியே செல்கிறீர்களா என்று நீதிபதி கேட்ட போதும் மறுத்த வைகோ, திடீரென ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று அமாவாசை நாளாகும். 53 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு வைகோ இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார். வாலண்டியராக சிறை சென்று இப்போது ஜாமீனில் வெளியே வர உள்ளார் வைகோ. அவர் ஜாமீன் கேட்ட உடனேயே சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வர ஆரம்பித்து விட்டன.
வைகோ சிறையில் இருந்த இந்த நேரத்தில்தான் மதிமுக உருவான நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளரே சிறையில் இருந்ததால் விழாவை விமரிசையாக கொண்டாடவில்லை. இந்த நிலையில் வைகோவின் வருகை மதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை தருமா பார்க்கலாம்.







