தம்மை பராமரிக்க பிள்ளைகளும் அருகில் இல்லை, பராமரிக்க ஆட்களும் இல்லை என்ற நிலை உருவாகியதாலேயே முதியோர் இல்லங்களை நாம் கூடுதலாக அமைக்க வேண்டி வந்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கனகராயன் குளம் பிரதேசத்தில் முருகர் தங்கம்மா நடராஜா நினைவு முற்ற திறப்பு விழாவும், முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
குழந்தைகள் போன்று வயோதிபர்களும் பராமரிக்கப்பட வேண்டும். நித்தமும் வெளியில் சென்று பல வேலைகளுக்கிடையே நாட்டுநடப்புக்கள், செய்திகள் எனப்பலவற்றை அறிந்துவந்தவர்கள் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும் போது அவர்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஒரு உறவு தேவை.
ஆனால் எமக்கோ அவர்களுடன் பொழுதைக் கழிக்க நேரமில்லை. இந்த நிலையில் அவர்களும் துக்கப்படுகின்றார்கள்.
நாமும் மனச்சுமையுடன் சஞ்சலப்பட வேண்டியுள்ளது. இவற்றால் வயோதிபர்கள் பலர் தாமாகவே வயோதிப இல்லங்களில் வாழ விரும்புகின்றார்கள்.
சிலசமயங்களில் வயோதிப இல்லங்களில் போதுமான வசதிகள் காணப்படாத போதும் தமது பிள்ளைகள் படுகின்ற அல்லல்களை சகிக்கமுடியாது அதேநேரம் தமது இயலாமையையும் கருத்தில் கொண்டு இல்லங்களிலேயே இருந்து விடத் தீர்மானிக்கின்றார்கள்.
இல்லங்கள் பன்னாட்டுத் தரத்துக்கு ஒப்பானதாக அமைகின்றபோது அவர்களின் வாழ்க்கைத்தரம் சுகமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமையும் என்று எதிர்பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டியிருந்தார்.
மற்றும் கனகராயன்குளம் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் நித்தியானந்தன், கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.