இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
நாட்டின் கடல் பிரதேசத்தை சுற்றி மழை மற்றும் காற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையுடனான காலநிலை நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றி படிப்படியாக ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னாரில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மணிக்கு 60 மற்றும் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று வீசும் போது கடல் பகுதியில் இடைக்கிடையே கொந்தளிப்பு நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அந்த கடல் பிரதேசங்களில் அடைமழை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடையே 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதனால் அந்த பிரதேசங்களில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட கூடும்.
இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.







