`தங்கல்’ படத்தின் வசூலுக்கு ஈடுகொடுக்க `பாகுபலி-2′ படக்குழுவின் புதிய திட்டம்

இந்திய சினிமாவிற்கு புதிய அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ள பிரம்மாண்ட படைப்பு எஸ்.எஸ்.ராஜமவுலியின் `பாகுபலி-2′. இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனையில் ரூ.1500 கோடியை தாண்டி புதிய மைல்கல்லை தொட்டு வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

வசூலில் இந்திய சினிமாவை பாலிவுட் படங்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், தென்னிந்திய திரைப்படம் ஒன்று உலகலவில் வசூல் சாதனை படைத்து, பேசப்படும் படமாக உருவெடுத்திருப்பதற்கு காரணமானவர் ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நிலையில், `பாகுபலி-2′ -வின் வசூலுக்கு போட்டியாக அமீர்கானின் `தங்கல்’ படம் 2 வாரங்களுக்கு முன்பு சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட `தங்கல்’ சீனாவில் மட்டும் ரூ. 700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூல் சாதனையையும் `தங்கல்’முறியடித்துள்ளது.

`பாகுபலி-2′  படத்தை தொடர்ந்து வசூலில் படமும் வசூலில் வரலாற்றை திருப்பி எழுதி வருகிறது. உலகம் முழுவதும் சாதனை படைத்து வரும் `தங்கல்’  வசூலில் ரூ.1500 கோடிக்கு நெருக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே `பாகுபலி-2′ -ன் வசூலை இன்னும் சிலநாளில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் `தங்கல்’ படத்தின் வசூல் சாதனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக `பாகுபலி-2′ படத்தை சீனாவில் திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி படத்தை வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சீனாவில் வெளியான `பாகுபலி’ படத்தின் முதல் பாகம் ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.