அமெரிக்க மக்களிடம் ‘சர்க்கஸ்’ ஆர்வம் குறைந்தது: 146 ஆண்டுகால கம்பெனி மூடப்பட்டது

அமெரிக்காவில் சர்க்கஸ் மீது மக்கள் மிக அதிக ஆர்வம் வைத்திருந்தனர். இதனால் அங்கு பல சர்க்கஸ் கம்பெனிகள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் ஏராளமான கலைஞர்கள் உருவாகி சாகசங்கள் மூலம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தனர்.

தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் அமெரிக்க மக்களிடம் சர்க்கஸ் மீதான ஆர்வம் குறைந்தது. இதனால் அரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வந்தது. எனவே, விலங்குகள் மற்றும் சர்க்கஸ் கலைஞர்களுக்கு உரிய சம்பளம் வழங்க முடியவில்லை. ஆகவே சர்க்கஸ் கம்பெனிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. புகழ் பெற்ற ரிங்ளிங் பிரதர்ஸ் அன்ட் பர்னம் அன் பெய்லி என்ற சர்க்கஸ் நிறுவனம் மூடப்பட்டது. இது 146 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அதில் 13 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பணி புரிந்து வந்தனர்.

இந்த சர்க்கஸ் கம்பெனி நேற்று நியூயார்க்கில் தனது கடைசி ‘ஷோ’வை (காட்சியை) நடத்தி முடித்தது. இதனால் சர்க்கஸ் கலைஞர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த சோகமும், கவலையும் அடைந்தனர். அதே நேரத்தில் விலங்கின ஆர்வலர்கள் சர்க்கஸ் மூடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.