குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்: நடிகை வனிதா ஆவேசம்

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே டெலிவிஷன் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.

இரண்டாவதாக 2009-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். 2012-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற 8 வயது மகள் இருக்கிறார்.

குழந்தை ஜெயனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்தார். இந்த நிலையில் குழந்தையை, வனிதா கடத்திச்சென்று விட்டதாக ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலம் அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வனிதா மீது குழந்தை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து வனிதா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“நான், குழந்தையை கடத்தியதாக போலீசில் பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனந்தராஜை நான் விவாகரத்து செய்தபோது குழந்தையை, திங்கள் முதல் வியாழன் வரை அவர் பார்த்துக்கொள்வது எனவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பார்த்துக்கொள்வது என்றும் முடிவானது.

ஆனால் 3 வருடத்துக்கு பின் திடீரென ஆனந்தராஜ், என்னிடம் தெரிவிக்காமல் குழந்தையுடன் ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டு முகவரி, செல்போன் எண் விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

குழந்தையை பார்க்க முடியாமல் தவித்தேன். ஆனந்தராஜின் இ-மெயில் முகவரி என்னிடம் இருந்ததால் அதில் குழந்தை பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு அந்த இ-மெயிலில் இருந்த எனது போன் நம்பரை எடுத்து ஜெயனிதா என்னிடம் பேசினாள். அப்போது ஐதராபாத்தில் பாதுகாப்பாக இல்லை. என்னை அழைத்துச்சென்று விடுங்கள் என்று கதறி அழுதாள். இதனால் உடனடியாக ஐதராபாத் சென்று அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு குழந்தையை என்னுடன் அழைத்து வந்து விட்டேன்.

எனது மகள் என்னுடன் விரும்பி வந்ததை கடத்தல் என்று எப்படி சொல்ல முடியும்.? என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. குழந்தையை ஆனந்தராஜிடம் ஒப்படைக்க மாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி குழந்தையை மீட்பேன்.

இவ்வாறு வனிதா கூறினார்.