சசிகலா நியமனத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனிடம் ஓ.பன்னீர்செல்வம் அணி பிரமாண பத்திரம் தாக்கல்!!

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்றும் பெயர் வழங்கிய தேர்தல் கமிஷன், அந்த அணிகளுக்கு தனித்தனி சின்னங்களையும் ஒதுக்கியது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதையும், அவரால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் கே.சி.பழனிச்சாமி, டாக்டர் வி.மைத்ரேயன் உள்ளிட்டோர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் மனு அளித்து உள்ளனர். அந்த மனுவை தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த டாக்டர் வி.மைத்ரேயன் தரப்பில் நேற்று தேர்தல் கமிஷனிடம் 175 பக்கங்களில் பிரமாண பத்திரம் மற்றும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் பாலாஜி, வைஷ்ணவி பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்தல் கமிஷனிடம் இந்த ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

டாக்டர் வி.மைத்ரேயன் கையெழுத்திட்டுள்ள அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் கமிஷனால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது அத்தொகுதியின் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது பற்றியும், அது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்தும் தேர்தல் கமிஷன் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டி.டி.வி.தினகரன் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இடம் காலியாக இருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் என்று யாருடைய பெயரும் அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தினால் பொதுச்செயலாளர் காலியாக உள்ளது. இப்படிப்பட்ட அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும் போது அவைத்தலைவரும், பொருளாளரும் கட்சிப்பணிகளை ஆற்றுவார்கள் என்று அ.தி.மு.க.வின் சட்டவிதியில் கூறப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு முறையில்தான் கழகத்தின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சட்டவிதியில் கூறப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சியின் விதிக்கு எதிரானதாகும். அவருக்கு அந்த பதவியில் இருக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

பொதுச்செயலாளராக பதவி வகிக்க சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லாத போது, அ.தி.மு.க. அலுவலகத்தை பயன்படுத்தவும் அவரது அணியினருக்கு உரிமை கிடையாது.

தற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலும், துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் டெல்லி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.வின் பொருளாளராக தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம்தான் பணியாற்ற முடியும் என்ற விதிமுறை இருந்தும், சசிகலாவால் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால், ஜெயலலிதாவால் ஏற்கனவே பொருளாளராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் வங்கிகளுக்கு கடிதம் எழுதினார். அதில், தேர்தல் கமிஷனில் இருந்து தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படும் வரை அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என்றும், கட்சி விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படாத திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்பட அனுமதிக்கக்கூடாது என்றும் கூறி இருந்தார். இருப்பினும் வங்கிகள் அதனை கருத்தில் கொள்ளாமல் திண்டுக்கல் சீனிவாசன் கோடிக்கணக்கான ரூபாயை வங்கிகளில் இருந்து எடுக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தேர்தல் கமிஷன் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அணிதான் உண்மையான அ.தி.மு.க. இந்த அணிக்குத்தான் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது தொடர்பாக பல லட்சக்கணக்கான உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் தேர்தல் கமிஷனிடம் ஏற்கனவே பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவரை முதல்-அமைச்சராகவும் ஆக்கினார்.

இந்த நிலையில் கட்சி விதிமுறைகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் இன்னும் தொடருவது சட்டவிரோதமானது ஆகும். அ.தி.மு.க.வின் விதிமுறைகளில், தற்போது உள்ளது போல இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு எந்த முகாந்திரமும் கிடையாது.

எனவே, இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். கட்சி விதிகளின்படி, அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இ.மதுசூதனன் பெயரையும், பொருளாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரையும் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பிரமாண பத்திரத்துடன் கட்சியின் விதிமுறைகள், கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஜெயலலிதாவால் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முறையே அவைத்தலைவராகவும், பொருளாளராகவும் நியமிக்கப்பட்ட உத்தரவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.