அமைச்சரவை மாற்றம் பற்றி பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் எழுந்திருக்கும் இவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை மாற்ற முயலவேண்டாமென அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அமைச்சரவையில் மாற்றமொன்றைச் செய்யவேண்டுமானால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே மாத்திரமே செய்யப்படவேண்டும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மீது கைவைக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதனையடுத்தே மேற்படி எச்சரிக்கையை பிரதமர் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய கலந்துரையாடலின்போதே அவரது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மாற்றமொன்றைக் கட்டாயமாக செய்தே தீரவேண்டுமென்றால் அது குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குப் பின்பே செய்யப்படவேண்டும் என்று பிரதமர் இதன்போது வலியுறுத்தியிருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.







